தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 6:42 AM IST

ETV Bharat / state

அரசு பள்ளியில் மடிக்கணினி திருட்டு; தஞ்சை, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஜராக உத்தரவு!

Government school laptop theft case: அரசுப் பள்ளியில் மடிக்கணினி திருட்டுப் போன விவகாரம் தொடர்பாக தஞ்சை மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

government school laptop theft case
அரசு பள்ளியில் மடிக்கணினி திருட்டு - தஞ்சை மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஜராக உத்தரவு

மதுரை: தஞ்சாவூரைச் சேர்ந்த சசிகலா ராணி மற்றும் மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி ஆகியோர் அரசு மேனிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள். இவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இரு வேறு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுக்களில், “நாங்கள் தஞ்சாவூர் மற்றும் மதுரை அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளோம். எங்களுக்கு அரசுத் தரப்பில் வழங்க வேண்டிய பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்து, மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்த விசாரணையில், தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட மடிக்கணினிகள் திருடப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், எங்களது பணி ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, இதனை ரத்து செய்து, எங்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மடிக்கணினிகளைக் கண்டுபிடிப்பது தொடர்பாக ஏன் அறிவியல் பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, மடிக்கணினியின் ஐபி எண், தயாரிப்பு விவரம் உள்ளிட்டவற்றைக் கொண்டு ஏன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என விசாரணை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில், இந்த மனுக்கள் நேற்று (டிச.12) மீண்டும் நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பட்டு தேவானந்த், “இந்த வழக்கில் அரசுத் தரப்பு விளக்கம் ஏற்புடையதாக இல்லை. எனவே, தஞ்சை மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் டிசம்பர் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:பீலா ராஜேஷ் டூ பீலா வெங்கடேசன்.. பெண் ஜஏஎஸ் அதிகாரியின் திடீர் பெயர் மாற்றம் ஏன்?

ABOUT THE AUTHOR

...view details