தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா? - நீதிமன்றம் கேள்வி

அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசால் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, 3 மாதங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசியில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா? - நீதிமன்றம் அதிரடி!
தென்காசியில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா? - நீதிமன்றம் அதிரடி!

By

Published : Jan 24, 2023, 6:25 AM IST

மதுரை:திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவி, மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் இருந்து உருவாகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது.

மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் ஏராளமான அருவிகள் இயற்கையாக உருவாகின்றன. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஐந்தருவி, குற்றாலம் அருவி உள்ளிட்ட இயற்கை அருவிகள் உள்ளன. சீசன் காலங்களில் ஏராளமான கூட்டம் நிரம்பி வழியும் சூழலில், பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ஏராளமான ரிசார்ட்டுகள் தனியார் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி, அவற்றை இணையதளங்களில் விளம்பரப்படுத்துகின்றனர்.

இதற்காக இயற்கையான அருவிகளின் நீர்வழிப் பாதையை மாற்றுகின்றனர். இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதுபோல் சட்ட விரோதமாக செயற்கை தனியார் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே மேற்குதொடர்ச்சிமலையில் உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி, தென்காசி மாவட்டத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, மலையில் உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி, செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, 3 மாதங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய ரிசார்ட்டுகள் உள்ளிட்டவற்றை மூட நடவடிக்கை எடுக்கவும், குற்றவியல் வழக்கும் பதிய வேண்டும்.

ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, அங்கு சட்டவிரோத தனியார் நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டிருந்தால், அந்த குத்தகை ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். மேலும் உத்தரவு நடைமுறைபடுத்தப்பட்டது குறித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்படுகிறது” எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:தேசியக்கொடி கம்பத்தில் சாதிக்கொடி; நெல்லை ஆட்சியரிடம் புகார்!

ABOUT THE AUTHOR

...view details