தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கையில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் நேருக்கு நேர் மோதல்.. சற்று நேரத்தில் முடிவு! - Sivaganga Jayalaitha Birthday

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒரே நேரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் இன்று மாலை 6 மணிக்குள் மனுதாரர்களின் 2 மனுக்கள் குறித்து சிவகங்கை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சட்டத்திற்கு உட்பட்ட முடிவை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் நேருக்கு நேர் மோதல்!
சிவகங்கையில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் நேருக்கு நேர் மோதல்!

By

Published : Mar 9, 2023, 5:42 PM IST

மதுரை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக, வருகிற மார்ச் 11ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், கீழ்பதி கிராமத்தில் உள்ள தனியார் நிலத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் அதிமுக பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ஆகியவற்றை நடத்த உள்ளோம்.

எனவே, சிவகங்கை மாவட்டம், கீழ்பதி கிராமத்தில் தனியார் நிலத்தில் தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் அதிமுக பொதுக்கூட்டம், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கே.ஆர்.அசோகன் என்பவரும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சிவகங்கை மாவட்டச் செயலர், கட்சி உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியில் இருக்கும் மோதல்களை தவிர்ப்பதற்காக சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு வருகிற மார்ச் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

இந்த 2 வழக்குகளும், இன்று (மார்ச் 9) உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்வு அன்று, அவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. மேலும் வழக்கு குறித்து பதில் அளிக்க கால அவகாசம் தேவை” என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, “மனுதாரர்களின் 2 மனுக்களையும் சிவகங்கை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இன்று மாலை 6 மணிக்குள் பரிசீலனை செய்து, சட்டத்திற்கு உட்பட்ட முடிவை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

முன்னதாக அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதன் முதலாக நேற்று (மார்ச் 8) அதிமுகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்படுவது, பொதுக்குழு தேதி ஆகியவை குறித்து விவாதித்ததாக தகவல்கள் வெளியானது. அதேநேரம், நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, பின் வாபஸ் பெறப்பட்ட செந்தில் முருகன், ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதனையடுத்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செந்தில் முருகனை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். இவ்வாறு ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், சிவகங்கையில் இரு தரப்பிலும் நலத்திட்ட விழா மற்றும் ஆர்ப்பாட்டம் ஆகியவற்றிற்கு ஒரே நாளில் அனுமதி கேட்டு மனுத் தாக்கல் செய்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க:"அதிமுகவை அழிக்க கைக்கூலியாக இருக்கிறார் ஈபிஎஸ்" - நாஞ்சில் கோலப்பன் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details