மதுரை:கைலாசப்பட்டி கோயில் பூசாரி தற்கொலை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, அரசுத் தரப்பு சாட்சிகளிடம் மறு குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், அரசு மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை மருத்துவர் மற்றும் தடயவியல் நிபுணர் ஆகியோரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகமுத்து. கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தவர், கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 8 அன்று தற்கொலை செய்து உயிரிழந்தார். மேலும், தனது தற்கொலைக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா உள்ளிட்டோர் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பூசாரியை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி ஓ.ராஜா உள்பட ஏழு பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என ஓ.ராஜா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.