மதுரை:கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரபேக்கா ஜோசப் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “அரிக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை, கடந்த சில நாட்களாக தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுற்றித் திரிந்து மக்களை அச்சுறுத்தியது.
கேரளா அரசு அரிசி கொம்பனை கும்கியாக மாற்ற முயற்சி செய்தது. ஆனால், விலங்கு நல ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்கு சென்றதால், அரிக்கொம்பனை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பரம்பிக்குளம் புலிகள் சரணாலய பகுதியில் யானையை விட முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அரிக்கொம்பன் யானையை வளர்ப்பு யானையாக மாற்ற கேரள அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அரிக்கொம்பன் யானையை பெரியார் புலிகள் சரணாலய பகுதியில் விடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போதுதான் யானை கம்பம் பகுதியில் நுழைந்தது.
சின்னக்கானல் பகுதியிலும் ஏராளமான ரிசார்ட்டுகள், ஆக்கிரமிப்புகளால் யானையின் வலசை பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாலேயே, அரிக்கொம்பன் ஊருக்குள் நுழையும் நிலை உருவானது. சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழும் பழங்குடியினர், அரிக்கொம்பன் யானையை கடவுளின் குழந்தையாக பார்ப்பதோடு, மீண்டும் அந்தப் பகுதியிலேயே யானையை விட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், ஊடகங்கள் யானையை முரட்டுத்தனமான, இழிவான வார்த்தைகளால் குறிப்பிடுவது ஏற்கும் வகையில் இல்லை. ஆகவே, யானையை வேறு புது இடத்திற்கு மாற்ற முயற்சிப்பதோடு, மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியிலேயே யானை வசிக்க அனுமதிக்க வேண்டும்.