சென்னை:திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக கலை மற்றும் பண்பாடு துறை மூலமாக இளைஞர்களுக்கு இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலைகள், ஓவியம் மற்றும் சிற்பக்கலை கற்பிக்கப்படுகிறது.
தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி வருகிறது. கலைமாமணி விருது 5 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு "கலை இளமணி" விருதும், 19 முதல் 35 வயது வரை "கலை வளர்மதி" விருதும், 36 முதல் 50 வயது வரை "கலை சுடர்மணி" விருதும், 51 முதல் 60 வயது வரை "கலை நன்மணி" விருதும், 61 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு "கலை முதுமணி" விருதும் வழங்கப்படுகிறது.
கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயது வரம்போ, எந்த வித தகுதியோ, எந்த வித நெறிமுறையோ இன்று வரை வகுக்கப்படவில்லை. 2019 - 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 20.02.2021ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. இதில் தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் வழங்கிய சான்றிதழில் உறுப்பினர், செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் அவசர கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்ப பெற வலியுறுத்தி அரசு அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, 2019 - 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 2021இல் வழங்கப்பட்டது. இதில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்" என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.