மதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணதாசன் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில், “சிவகங்கை மற்றும் தேவகோட்டையைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு தளக்காவயல் வரத்துக் கால்வாய் வழியாக விருச்சுளி ஆறு மூலம் தண்ணீர் செல்கிறது.
இந்த நிலையில், தேவகோட்டை நகராட்சி தளக்காவயல் வரத்துக் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளை, திடக்கழிவு மற்றும் நகராட்சியில் சேமிக்கப்படும் திடக்கழிவு குப்பைகளைக் கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், நகராட்சி சார்பில் குப்பைக் கிடங்கு நிரந்தரமாக அமைக்கும் பணியை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. நகராட்சியின் இந்த செயல், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிப்போடு, நீர்வரத்து கால்வாயை அழிக்கும் செயலாக உள்ளது.
இதன் காரணமாக கிராமசபைக் கூட்டத்தில் இங்கு குப்பைக்கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், பஞ்சாயத்து தலைவர் என அணைத்து அரசுத் துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்தும், இதுவரை எந்த பதிலும், நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், தேவகோட்டை தளக்காவயல் வரத்துக் கால்வாய் அருகில் எந்த விதிகளையும் பின்பற்றாமல் விவசாயிகளை, நீர்வரத்து கால்வாய்களைப் பாதிக்கும் வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அவசர நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றனர்.