மதுரை:ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த 300 கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரிக்கக் கோரி முன்னதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
அதில், “தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக சிபிஐ செயல்படத் தேவையான சட்டத்தை உருவாக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். தேர்தல் ஆணையம், தலைமை தணிக்கை ஆணையரகத்தைப் போல சிபிஐ சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
சிபிஐக்கு நவீன வசதிகள்
சிபிஐக்கு தேவையான நிதியை ஓராண்டிற்குள் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். அமைச்சரவை செயலாளரைப் போல தனித்த அதிகாரத்துடன் அமைச்சர், பிரதமரிடம் நேரடியாக அறிக்கையளிக்கும் வகையில் சிபிஐ இயக்குநருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.
மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இல்லாமல் தனித்து செயல்பட வேண்டும். அமெரிக்காவின் எஃப்பிஐ, இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு காவலரை போல நவீன வசதிகள், தொழில்நுட்பங்கள் சிபிஐக்கு வழங்கப்பட வேண்டும்.