தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்மார்ட் சிட்டி பணி - அறிக்கை தாக்கல் செய்ய தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - ஸ்மார்ட் சிட்டி பணி

மதுரை: தஞ்சை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெறும் பகுதியில் இருக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய, தொல்லியல், புராதானச் சின்னங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தஞ்சை மாவட்ட ஆட்சியர், தஞ்சை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

hc

By

Published : Sep 26, 2019, 12:00 AM IST

தஞ்சையைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தஞ்சை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரிய கோவில், பெருவுடையார் கோவில் என அறியப்படும் தஞ்சை பிரகதீஷ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

இது தொல்லியல்துறையினரால் பழம்பெரும் சின்னமாகவும், யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய உலக பாரம்பரியச் சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணியை முன்னெடுக்க கோவிலிலிருந்து 300 அடி தொலைவு வரை எவ்வித செயலையும் செய்ய தொல்லியல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.

ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட போது, தஞ்சை பெரிய கோவில், சிவகங்கை சிறுகோட்டை உள்பட தொல்லியல்துறையின் கீழ் வரும் பகுதிகளில் தென் அலங்கம், கீழ் அலங்கம் ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3,4 மாடி கட்டங்கள் கட்ட தொல்லியல்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை என பதிலளிக்கப்பட்டது. அதே போல அந்த பணிக்காக டெண்டர் நடத்தவும் தொல்லியல்துறையிடம் அனுமதி பெறவில்லை.

தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பெயரில் அரசின் நிதி, வாய்ப்புகள் போன்றவை தவறாக பயன்படுத்தப்படுவதாக ஐயம் எழுந்துள்ளது. ஆகவே, தொல்லியல் துறையினரிடம் முறையாக தடையில்லா சான்று பெறாமல், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, தஞ்சை மாவட்டம் மற்றும் அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெறும் பகுதியில் இருக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய, தொல்லியல், புராதானச் சின்னங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தஞ்சை மாவட்ட ஆட்சியர், தஞ்சை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிர்வாக இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details