மதுரை: தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அதிக அளவில் மணல் கடத்தலைத் தடுப்பதற்காக, தென்காசி மாவட்டம் புளியரை சுங்கச் சாவடியில் 10 சக்கர வாகனங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல தடை விதித்ததை ரத்து செய்யக் கோரி, கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி பொதுச் செயலாளர் நாகராஜ், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “கேரளா மற்றும் தமிழ்நாடு முழுமைக்கும் வாகனங்களை இயக்குகிறோம். கேரளாவின் பெரும்பகுதி மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், பெரும்பாலான பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதனால் குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நடக்கும் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்குத் தேவையான கிராவல் ஜல்லி கற்கள், எம் சாண்ட் குவாரி தூசி மற்றும் மணலுக்கு தமிழ்நாட்டின் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தையே சார்ந்துள்ளோம். தமிழ்நாட்டின் உதவியின்றி கேரளாவின் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது.
ஜி.எஸ்.டி நடைசீட்டு உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகளின் உரிய அனுமதியுடன்தான் தமிழ்நாட்டில் இருந்து கனிமங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் புளியரை செக்போஸ்ட் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் புளியரை இன்ஸ்பெக்டர் மற்றும் கனிமவன அதிகாரிகள் உள்ளிட்டோர், 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிமங்கனைக் கொண்டு செல்ல மறுக்கின்றனர்.