மதுரை:தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை சிபிஐ காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை முதலாவது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து தந்தை மகன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 9 காவல் துறையினர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேல் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் 104 சாட்சிகளில் இதுவரை 46 சாட்சிகளுக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.