மதுரை: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே, கடந்த 2006ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட பலர் மீது திருச்சி ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
தற்போது இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய ஒருவர் இறந்து விட்டார். இதனையடுத்து, பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
தற்போது வழக்கில் தொடர்புடைய அர்ஜுன் சம்பத் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “என் மீதான எந்த ஆதாரமும் இல்லாமல், அனுமானத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு அலைக்கழிக்கும் வகையில் விசாரணை தாமதமாக நடைபெற்று வருகிறது. என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்து, கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.