மதுரை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சதிஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்தார். அதில், ‘அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பொய்யான வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோதக் காவலில் வைத்து காவல்துறை என்னையும், எனது சகோதரரையும் கடுமையாகத் தாக்கினர்.
அப்போது, எனது சகோதரர் அருண்குமாரின் நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. இதில், நான் மட்டுமன்றி விசாரணைக் கைதிகள் சிலரது பற்களை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்தார். அதைத் தொடர்ந்து என்னை காவலர்கள் சிறையில் அடைத்தனர்.
தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறை குற்றப்பத்திரிகை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும். அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை எனக்கு வழங்க வேண்டும்.
காவல்துறை அதிகாரி தாக்கியதில் பற்கள் உடைந்த எனக்கு எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவில் வழக்குப் பதிவு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணை அதிகாரியான அமுதா மற்றும் திருநெல்வேலி சார் ஆட்சியர் விசாரணை அறிக்கைகளை தனக்கு வழங்கக்கோரி ஏற்கனவே எனது சகோதரர் அருண்குமார் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணையில் உள்ளது.