மதுரை: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த படங்களை எடுத்து வருகிறார். கடைசியாக இவர் எடுத்த கர்ணன் படத்தில் கொடிக்குளம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது.
இந்த நிலையில், இரு வேறு சமூக மக்களும் கர்ணன் படத்தில் வந்த சம்பவங்களை மறந்து அமைதியான சூழலில் உள்ளனர். மேலும் தற்போது உள்ள சமூகத்திற்கு இது போன்ற சம்பவங்கள் நினைவில் இல்லை. ஆனால், அதனை நினைவு கூறும் விதமாக கர்ணன் படம் இருந்தது.
தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வெளியாக உள்ள படம், மாமன்னன். இப்படம் நாளை (ஜூன் 29) திரைக்கு வரவுள்ளது. இதனுடைய பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை இரு வேறு சமூகத்திற்கு இடையே உள்ள பிரச்னையைக் காட்டும் விதமாகவே அமைந்துள்ளது.
குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காத்தப்ப புலித்தேவன் என்பவரை மாமன்னன் என அழைப்பார்கள். அவரை தவறாக சித்தரிக்கும் வண்ணம் இப்படம் அமைந்துள்ளது போல் தெரிகிறது. மேலும், இப்படத்தில் நடித்துள்ள கதாநாயகன் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உள்ளார். உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் நடித்துள்ளது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 173 (ஏ)-க்கு எதிராக உள்ளது.