தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஒரு அரசு அதிகாரியாவது பணிநீக்கம் செய்ய வேண்டும்” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை! - ஈடிவி பாரத்

MHMB providing medical insurance case: கடந்த 2017ஆம் ஆண்டு தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிமன்ற ஆவணங்களைத் தொலைத்த அலுவலர்கள் யார் என விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

contempt-of-court-case-against-officials-for-not-providing-medical-insurance-mhmb
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் உள்ள அரசு உயர் அதிகாரிகளை சரி செய்ய வேண்டியுள்ளது - நீதிபதி கருத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 4:25 PM IST

மதுரை: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.

கடந்த 2014ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இதற்கான மருத்துவச் செலவு சுமார் 9 லட்சத்தைக் காப்பீட்டுத் தொகையில் தனக்கு வழங்குமாறு மாவட்ட மருத்துவ இணை இயக்குநருக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் எனது மனு நிராகரிக்கப்பட்டது.

இது குறித்து, கடந்த 2017ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், தனக்கு வழங்க வேண்டிய மருத்துவக் காப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இதுவரை எனக்கு வர வேண்டிய மருத்துவக் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என 2021ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த நேரத்தில், அப்போதைய திருநெல்வேலி மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் நெடுமாறன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தார்.

மேலும், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் கோரிக்கை அடங்கிய ஆவணங்கள் தொலைந்து விட்டதால் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:“ஒரு லட்சம் பேர் அரசு முத்திரைகளை விதிகளை மீறி பயன்படுத்தி உள்ளனர்” - தமிழ்நாடு அரசு தகவல்!

இதனையடுத்து நீதிபதி, “அரசுப் பேருந்த்தில் பயணிக்கக் கூடிய பயணி தனது டிக்கெட்டை தொலைத்து விட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல், ஒரு நடத்துநர் தனது பயண டிக்கெட் பண்டலை தொலைத்து விட்டால், அவரை பணியிலிருந்து நீக்கக் கூடிய நிலை உள்ளது. ஆனால், மருத்துவத் துறையில் ஒரு உயர் அதிகாரி ஆவணங்களைத் தொலைத்து விட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இது போன்ற அதிகாரிகளை ஒருவரையாவது பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அப்பொழுதுதான் மற்ற அதிகாரிகளுக்குப் பாடமாக அமையும். பணியிலுள்ள அரசு உயர் அதிகாரிகளைச் சரி செய்ய வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.

மேலும், “நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், அதைச் செயல்படுத்த அரசு அதிகாரிகள், ஏதோ தனது சொந்த பணத்தைச் செலவழிப்பதுபோல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற சொன்ன ஆவணங்கள் தொலைந்து விட்டதாகக் கூறுகின்றனர்.

எனவே, ஆவணங்களைத் தொலைத்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வேண்டும்” என உத்தரவிட்டார். மேலும், வழக்கில் மனுதாரர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதால் மனுவை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க:சந்திரபாபு நாயுடுவின் மேல்முறையீடு மனு; நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details