தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தமிழ்நாட்டை ஆள நல்ல தலைமை வேண்டும்’ - மதுரை அமமுக வேட்பாளர் பேட்டி - டேவிட் அண்ணாதுரை

மதுரை: தமிழ்நாட்டை ஆள நல்ல தலைமை வேண்டும் என மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்

By

Published : Apr 11, 2019, 8:45 PM IST

மதுரை அருகே விராட்டிபத்து கிராமத்தில் தேர்தல் பரப்புரை நிகழ்த்திய அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, நமது ஈ டிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்,

"ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க ஒரு தலைமையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் அந்த இடத்தை நிரப்பக்கூடிய ஒரு தலைவராக டிடிவி தினகரனை மக்கள் பார்ப்பதால் எங்களுக்கான வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களிடமிருந்து இதுபோன்ற உற்சாகத்தையே நாங்கள் பார்க்கிறோம். மதுரை நாடாளுமன்றத் தொகுதியானது தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஒரு பகுதியாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மதுரை - தூத்துக்குடி வரை உள்ள சாலையை தொழில் வழிச்சாலை என்று அறிவித்தார். இதனையடுத்து வந்த ஆட்சியாளர்கள் இத்திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர்.

மதுரை அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை

நான் வெற்றி பெற்றால் மிகச் சிறப்பான முறையில் இந்த திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்வேன். அதேபோன்று இயற்கைக்கு உகந்த தொழிற்சாலைகளை கொண்டுவருவதும் எனது முன்னுரிமை திட்டங்களில் ஒன்றாக இருக்கும். கல்லூரி மாணவர்கள் தங்களது படிப்பை முடித்தவுடன் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் ஒரு பொது நூலகம் ஒன்றை மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் அனைத்திலும் உருவாக்குவது என்பதை எனது தேர்தல் வாக்குறுதியாகவே வழங்கியிருக்கிறேன்.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச அளவிலான விமான நிலையமாக மாற்றிடுவேன். வேலையின்றி இருக்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவது எனது முக்கியமான பணியாகும். அதேபோன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொலைநோக்குப் பார்வையில் கொண்டு வந்த மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் மதுரை பகுதியில் உறுதி செய்து நிலத்தடி நீர்மட்டம் மேம்படப் பாடுபடுவேன்.


நான் நாடாளுமன்ற உறுப்பினராக தெர்வு செய்யப்படும் பட்சத்தில் வளர்ச்சி சார்ந்த திட்டங்களை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். இதற்கு மத்திய அரசின் உதவியும், மாநில அரசின் முயற்சியும் மிக மிக முக்கியம். இந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை நாங்கள் வைக்கின்ற முழக்கம் என்பது நல்ல தலைமை என்பதுதான். தமிழகம் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு நல்ல தலைமை வேண்டும். தகப்பன் இல்லாத பிள்ளையாக தமிழகம் தொடர்ந்து இருப்பதை நாங்கள் மாற்றிக் காட்டுவோம். தமிழகத்தை தலைநிமிரச் செய்ய வேண்டும். அதற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details