தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை எய்ம்ஸ் நிர்வாக அலுவலக கட்டுமானப் பணிகள் நிறைவு.. அலுவலக பணியிடங்களுக்கான அறிவிப்பு என்ன? - தோப்பூர்

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக அலுவலக கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அலுவலக பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை எய்ம்ஸ் நிர்வாக அலுவலக கட்டுமானப் பணிகள் நிறைவு
மதுரை எய்ம்ஸ் நிர்வாக அலுவலக கட்டுமானப் பணிகள் நிறைவு

By

Published : Aug 8, 2023, 2:31 PM IST

மதுரை எய்ம்ஸ் நிர்வாக அலுவலக கட்டுமானப் பணிகள் நிறைவு

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக அலுவலக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. மேலும், அலுவலகத்தின் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜைகா நிறுவன நிதி உதவி மற்றும் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளைத் துவக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு முதற்கட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

மதுரை மட்டுமின்றி, தென் மாவட்ட மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இம்மருத்துவமனை மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையின் அருகே அமையவிருக்கிறது. இந்நிலையில், 2 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் நிர்வாக அலுவலகம் அமைக்கும் பணி கடந்த ஓராண்டிற்கு முன்பு துவங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்பணி தற்போது நிறைவடைந்து உள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்த அலுவலகத்திற்கான பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. அதன் ஒரு முதல்கட்டமாக இந்த நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றுவதற்கு, பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இணைய தளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் குரூப் பீ மற்றும் குரூப் சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நூலகர், தகவல் தொழில்நுட்ப அதிகாரி, எழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் வருகின்ற செப்டம்பர் 17ம் தேதி, மதுரை உட்பட 18 இடங்களில் கணினி வழியாக தேர்வு நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்குப் பிறகு பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பல்வேறு அரசியல் சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், அதன் கட்டுமானப் பணிகளுக்கான நிர்வாக அலுவலகம் தற்போது பயன்பாட்டுக்கு வரவுள்ளதும், அங்கு பணியாற்ற விரும்பும் ஊழியர்கள் பணிக்கான விண்ணப்பங்களை அனுப்பலாம் என்கின்ற உத்தரவும், எய்ம்ஸ் மருத்துவமனையை எதிர்பார்த்து உள்ள பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் துவக்கப்பட வேண்டும் எனவும் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை, மதுரையில் நடைபெறும் வகையில் மாற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த மருத்துவமனை மூலமாக தென் மாவட்ட மக்கள் தரமான மருத்துவ சிகிச்சையை பெற முடியும். மேலும் கூடுதல் எம்.பி.பி.எஸ் மருத்துவ சீட்டுகளும் மதுரைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:No-confidence motion: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் - ராகுல் துவக்கி வைப்பு!

ABOUT THE AUTHOR

...view details