மதுரை: வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் அனைத்திலும் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9ஆவது வார்டில் திமுக சார்பில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கிருஷ்ணவேணியும், அதிமுக சார்பில் இந்திராணியும் நேரடியாகப் போட்டியிடுகின்றனர்.
திமுகவினர் வேட்பாளரைப் போட்டியின்றித் தேர்வுசெய்வதற்காக அதிமுக வேட்பாளரை திமுகவினர் கடத்திவைத்துள்ளதாகவும் வேட்புமனுவைத் திரும்பப் பெறச் சொல்லி மிரட்டுவதாகவும் கூறி ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அக்கட்சியினர் வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இது குறித்து அதிமுக பொறுப்பாளர் சோணை கூறுகையில், "18 வார்டுகளில் ஏழு அதிமுக வேட்பாளர்கள் மனுவைத் திரும்பப்பெறச் செய்தனர். ஏற்கனவே நாங்கள் மீண்டும் அதிமுக சார்பில் புதிய வேட்பாளர்களை மனு தாக்கல்செய்ய வைத்தோம். இந்நிலையில் அதிமுக வேட்பாளரை திமுகவினர் கடத்திவைத்துள்ளனர். எங்கள் வேட்பாளர் வரும்வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம்" என்றார்.
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆர்.பி. உதயகுமார், அவரது ஆதரவாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் தொடர்கிறது.
இதையும் படிங்க: தேர்தலில் நின்றால் ஈனம் மானம் பார்க்கக் கூடாது - உடன்பிறப்புகளுக்கு அமைச்சர் அறிவுரை