மதுரை: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதி ஸ்ரீ ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரி அளித்த பேட்டியில், இந்தியாவிற்கான அடுத்த பிரதமர் தமிழ்நாட்டிலிருந்து என அமித் ஷா கூறினார்.... அது பற்றி உங்களுடைய கருத்து என கேட்கப்பட்ட போது, “தமிழர்கள் தாராளமாக வரலாமே, ஏன் தமிழர்கள் வரக்கூடாதா? தமிழ் மண்னை ஆண்ட ராஜராஜ சோழன் இங்கிருந்து கடாரம் வரை சென்று புலிக்கொடியை நாட்டினார். அதுபோல தான் யார் வேண்டுமானாலும் வரலாம்” என்று பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமராக தமிழ்நாட்டிலிருந்து அண்ணாமலையா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்ற கேள்விக்கு, ''அது ஆண்டவனின் கணக்கு, அதை நாம் தீர்மானிக்க முடியாது'' என்றார். பின்னர் தற்போதைய நடைமுறை சினிமா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அந்த கால சினிமாக்களில் தேச பக்தி மற்றும் தெய்வ பக்தி நிறைந்து இருந்தது. கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களைப் பார்த்தபோது என்னை மெய்சிலிர்க்க வைத்தது, ஆனால் தற்போதைய படங்கள் ஏதும் தேச பக்தி மற்றும் தெய்வபக்தி நிறைந்தவையாக இல்லை. மேலும் படங்கள் பார்ப்பது பார்க்காமல் இருப்பது அவரவர் விருப்பம்” எனத் தெரிவித்தார்.
பின்னர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை என்றார். அப்போது பேசிய அவர், ''அவரது வருகை பற்றி நான் ஏதும் கூறினால் அவரது ரசிகர்கள் என்னை திட்டுவார்கள். எனக்கு தேவை இல்லாத பிரச்னை வேண்டாம். அரசியலுக்கு வருவதும் வராததும் அவர் விருப்பம்’’ எனப் பேசியிருந்தார்.