தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுர ஆதீன நிலங்களை மீட்க உத்தரவு!

திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை மீட்டு, ஆதீன நிர்வாகத்திடம் ஒப்படைக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Madras
Madras

By

Published : Dec 7, 2022, 9:57 PM IST

மதுரை: திருச்செந்தூரை சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே, தருமபுரம் ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்தைப் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 3.5 ஏக்கர் இடத்தின் மதிப்பு தற்போது 100 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும். ஆதீனத்திற்குச் சொந்தமான சொத்துகளுக்கு 1971ஆம் ஆண்டு வரை ஆக்கிரமிப்பாளர்கள் வாடகை செலுத்தி வந்தனர். அதன்பிறகு, முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளனர். எனவே, தருமபுரம் ஆதீன மடத்தின் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், தருமபுர ஆதீன மடத்திற்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதற்கான மூல ஆவணங்களையும், சிலர் போலியான பத்திரப்பதிவு செய்துள்ளதற்கான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது ஆக்கிரமிப்பு சம்பந்தமான ஆவணங்களையும் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று(டிச.7) நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான இடங்களை உடனடியாக மீட்டு ஆதீன நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த மீட்பு நடவடிக்கைகளை 12 வாரங்களில் செய்து முடிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:மின் இணைப்புடன் ஆதார் பதிவு - உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details