மதுரை:மதுரை சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், மதுரை மாநகராட்சி பகுதிகள் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன்பு மொத்தம் 72 வார்டுகள் இருந்தன. கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு விரைவாக சேவை அளிக்கும் நோக்கத்துடன் மாநகராட்சி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு மற்றும் மதுரை மத்தியம் என பெயரிடப்பட்டு உள்ளது.
மதுரை மாநகராட்சியில் 6 முக்கிய துறைகளான பொறியியல், நகரமைப்பு, பொது சுகாதாரம், கணினிப்பிரிவு, வரிவசூல் உள்ளிட்ட துறைகள் நகராட்சி பணிகளை மேற்கொள்கின்றன. மதுரை மாநகராட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணிகளுக்காக பேட்டரி மூலம் இயங்கும் 509 வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த பேட்டரியில் இயங்கும் ஒரு வாகனத்தின் விலை 1 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயாகும்.
509 பேட்டரியில் இயங்கும் வாகனங்களில் 250 வாகனங்கள் மாநகரட்சியால் முழுமையான நிதி கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டு உள்ளது. 9 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 259 வாகனங்கள் ஸ்வச் பாரத் (Swachh Bharat) திட்டத்தின் கீழ் நிதி கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் மூலம் மதுரை மாநகரில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கப்பட்டு, மாநகராட்சி குடியிருப்பாளர்களுக்கு நீலம் மற்றும் பச்சை குப்பைத் தொட்டிகள் விநியோகம் செய்யப்பட்டது.
ஆனால் கடந்த சில நாட்களாக மதுரை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க கையால் இயக்கப்படும் ரிக்சா வண்டிகளை பயன்படுத்தி வருகின்றனர். பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் குறித்து விசாரித்த போது, பெரும்பாலான பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வேலை செய்யும் நிலையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.