மதுரை:மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் "மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா பகுதியில் எனக்கு சொந்தமான நிலத்தில் 2,224 சதுரஅடி நிலத்தினை வைகை அணை திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக கடந்த 2010 ஆம் ஆண்டு கையகப்படுத்தினர். ஆகவே, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கையகப்படுத்தப்பட்ட எனது இல்லத்திற்கு பதிலாக இழப்பீட்டு தொகை அல்லது மாற்றிடம் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "மனுதாரர் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. மாநகராட்சி தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இறுதிக்கட்ட விசாரணைக்காக 2023 ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆனால் மதுரை மாநகராட்சி தரப்பில் எந்தவித பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவரையிலும் மாநகராட்சி தரப்பில் சம்பந்தப்பட்ட நிலம் பட்டா நிலமா? இல்லையா? அல்லது மனுதாரரின் மனு பரிசீலனை செய்யப்பட்டதா இல்லையா? அல்லது மனுதாரர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் முறையாக கையகப்படுத்தப்பட்டதா? அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னால் அவர்களுக்கான அறிவிப்பு முறையாக வழங்கப்பட்டதா? உள்ளிட்ட எந்த தகவலையும் தெரிவிக்காததால், இந்த வழக்குக்கு தீர்வு காண இயலவில்லை.
மதுரை மாநகராட்சி ஆணையரின் இத்தகைய செயல் ஏற்புடையதல்ல எனவே மதுரை மாநகராட்சி ஆணையருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மதுரை மாநகராட்சியின் பொதுநிதிக்காக வழங்க வேண்டும். வழக்கு குறித்து வருவாய் ஆவணங்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: 'மீனாட்சிய பார்க்க அழகர் வாராரு... மருதைக்கு வாங்க மக்களே...' - சித்திரைத் திருவிழாவுக்கு தயாராகும் மாமதுரை!