மதுரை: கொடூரமான வழக்குகளில் சாட்சிகளின் ஆடியோ வீடியோ வாக்குமூலத்தை பதிவு செய்ததற்காக தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிற்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், பாராட்டு தெரிவித்து உள்ளார். இந்தச் சட்ட விதிகளை விசாரணை அதிகாரிகள் இதுவரை யாரும் பயன்படுத்தவில்லை என்று சுட்டிக்காட்டி உள்ள நீதிபதி ராமகிருஷ்ணன், சிறப்பு விசாரணைக் குழுவின், இந்த நடவடிக்கைகளைப் பாராட்டி உள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளை மற்ற வழக்குகளிலும், பின்பற்ற வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி செந்தில்குமார். விருதுநகர், அல்லம்பட்டியைச் சேர்ந்த இந்த செந்தில் குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக செந்தில்குமார் 4வது குற்றவாளி எனும் நிலையில், இவரைத் தவிர வரிச்சியூர் செல்வம் உட்பட மூன்று பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த இரட்டைக் கொலை வழக்கு விசாரணையில் சாட்சிகளை வற்புறுத்தியதாக போலீசார் மீது தொடரப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக, விசாரணை நடத்தும் பொருட்டு, தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்து இருந்தார்.
மதுரை சரக டிஐஜி, மதுரை எஸ்.பி., அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி, சங்கரன்கோவில் டி.எஸ்.பி உள்ளிட்டோர் அடங்கிய இந்தக் குழு, சமர்ப்பித்த அறிக்கையில், கைது செய்யாமல் தப்பிச் சென்றவர், மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தின் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மாயமானதாக சந்தேகிக்கப்பட்ட செல்வம், கொலை செய்யப்பட்டு தாமிரபரணியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.