கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த அமுதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் "கடந்த நவம்பர் 2ஆம் தேதியன்று நாகர்கோவில் அருகே பார்வதி உடனுடை பரமேஸ்வரன் திருக்கோயிலில் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அப்போது அதிக சப்தத்துடன் வெடி வெடிக்கப்பட்டது. அந்த வேளையில் மக்கள் கூடியிருந்த கூட்டத்திலும் வெடி வெடித்ததில் அங்கிருந்த மக்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்தில் என்னுடைய வலது காது, தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த வெடி விபத்திற்கு கோயில் நிர்வாகத்தின் அலட்சியம் மட்டுமே காரணம். இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே வெடி விபத்தில் காயமடைந்த நபர்களான பழனிக்கு ரூ.25 லட்சம், கோஷிகா விற்கு ரூ.1 லட்சம், அமுதாவிற்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.