தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் இல்ல திருமண விழா: அனுமதி பெறப்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டதா? - வனத்துறை அனுமதியின்றி திருமணத்தில் யானை

அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமண விழாவில் கஜபூஜைக்கு என அனுமதி பெறப்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டனவா? என்ற கேள்வி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களால் எழுந்துள்ளது.

அமைச்சர் இல்ல திருமண விழா
அமைச்சர் இல்ல திருமண விழா

By

Published : Dec 14, 2022, 8:11 AM IST

Updated : Dec 14, 2022, 10:21 AM IST

மதுரை: கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தியின் மகன் திருமண விழா அண்மையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த திருமண விழாவிற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது. இந்த விழாவில் முதலமைச்சரை வரவேற்கும் வகையில் கேரளாவில் இருந்து சாது மற்றும் நாராயண குட்டி என்ற இரண்டு ஆண் யானைகள் வரவழைக்கப்பட்டன. நுழைவாயில் முழுவதும் கரும்பு மற்றும் வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.

தனியார் விழாக்களில் யானைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், அமைச்சரின் மகன் திருமண விழாவிற்கு யானைகள் எப்படி கொண்டுவரப்பட்டன என்பது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.

அந்த கேள்விகளும் அதற்கான பதில்களும் பின்வருமாறு:

வளர்ப்பு யானைகள் திருமண நிகழ்வில் பங்கேற்க அனுமதி உண்டா என்ற கேள்விக்கு, அனுமதி இல்லை என வனத்துறை சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மதுரை மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து கடந்த 2022 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 2022 செப்டம்பர் 15 ஆம் தேதி வரை வளர்ப்பு யானைகள் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு கேரளா மாநிலத்தில் இருந்து, மதுரைக்கு இரண்டு யானைகள் கஜபூஜைக்கு கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டது எனவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரையில் 2022 செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற திருமண விழாவிற்காக கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட யானைகளை கண்காணிக்க மதுரை வன சரகம் சார்பாக நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் பெயர் மற்றும் பதவி விவரங்களை தகவலாக தரவும் என்ற கேள்விக்கு, மதுரை வனக்கோட்ட வன உயிரின சரக வனச்சரக அலுவலர் என பதிலளித்துள்ளார்.

இந்த தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விக்கான பதிலில் இரு யானைகள் கேரளாவில் இருந்து கஜபூஜைக்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், செப்-9 ஆம் தேதி திருமண விழாவில் பங்கேற்ற யானைகளை கண்காணிக்கும் அதிகாரிகள் குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.

இந்த நிலையில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சரை வரவேற்பதற்கு கஜபூஜை என்ற பெயரில் கேரளாவில் இருந்து யானைகள் அழைத்து வரப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அமைச்சரின் மகன் திருமண விழாவில் எந்த அடிப்படையில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கஜபூஜை என்ற பெயரில் கேரள வனத்துறையையும் ஏமாற்றி இரண்டு யானைகளை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து சட்டவிரோதமாக முதலமைச்சர் பங்கேற்ற திருமண விழாவில் பயன்படுத்தப்பட்டதா? கேரளா அரசை மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசையும் ஏமாற்றி கஜபூஜைக்காக கொண்டுவரப்பட்ட யானைகள் எங்கே சென்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது தொடர்பான விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: நடிகர் விஜய்யின் தந்தை மீது மோசடி புகார்: மீண்டும் விசாரணை

Last Updated : Dec 14, 2022, 10:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details