ராமநாதபுரத்தைச் சேர்ந்த கார்த்திகைராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், நாங்கள் வண்ணார் சமூகத்தை சார்ந்தவர்கள். நாங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட்டை, சக்கரக்கோட்டை, பழங்குளம் ஆகிய பகுதிகளில் 100 வருடங்களுக்கும் மேலாக சலவைத் தொழில் செய்து வருகிறோம். இந்தப் பகுதி சுமார் 1.68 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது வண்ணார் சமூகத்தினருக்கு பாத்தியபட்டதாகும்.
நில அபகரிப்பு வழக்கு - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
மதுரை: குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சொந்தமான இடத்தை, அவர்களின் அனுமதியின்றி வேறு நபருக்கு விற்பனை செய்த பட்டாவை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில், ராமநாதபுரம் அரண்மனையை சேர்ந்த குமரன் சேதுபதி, மாவட்ட ஆட்சியர் உட்பட 42 பேர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் அரண்மனையைச் சேர்ந்த குமரன் சேதுபதி மற்றும் சிலர் சேர்ந்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் தவறான ஆவணங்களை சமர்பித்து குறிப்பிட்ட இடத்திற்கு அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பை பெற்றுவிட்டனர். இதனை பயன்படுத்தி வண்ணார் சமூகத்தினருக்கான இடத்தை வேறு நபர்களுக்கு தற்போது விற்பனை செய்துவிட்டனர். இதுகுறித்த வழக்கு தற்போது மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள போதே பட்டா மாறுதல் செய்யபட்டுள்ளது. இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் மனு கொடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்களுக்கு பாத்தியப்பட்ட இடத்தை விற்பனை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், விற்பனை செய்த அனைத்து பட்டாக்களை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், இதுகுறித்து ராமநாதபுரம் அரண்மனையை சேர்ந்த குமரன் சேதுபதி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உட்பட 42 பேர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.