தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹோட்டல் உரிமையாளர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு! - கொடைக்கானல்

திண்டுக்கல்: புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற நகராட்சி நிர்வாகத்துறை செயலரிடம் ஹோட்டல் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது

madras high court madurai branch

By

Published : Jul 26, 2019, 12:23 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர்கள் பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.அதில், "கொடைக்கானலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாஸ்டர் பிளானை மாற்ற வேண்டும். கடந்த 1993ஆம் ஆண்டிற்கான மாஸ்டர் பிளான் இதுவரை மாற்றப்படவில்லை என்றும், 1988ம் ஆண்டின் மக்கள் தொகை, சுற்றுலாப்பயணிகள் வருகை அடிப்படையில் அந்த மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது.

பின்பு 1999இல் தயாரிக்கப்பட்ட புதிய மாஸ்டர் பிளானுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது அவசியம். ஆனால், விதிகளை மீறி கட்டிடம் கட்டியுள்ளதாகக் கூறி நோட்டீஸ் அனுப்புவது, சீல் வைப்பது போன்ற பணிகளில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபடுகின்றனர் .

எனவே, புதிய மாஸ்டர் பிளான் அமலாகும் வரை நோட்டீஸ் அனுப்பவும், சீல் வைக்கவும் தடைவிதிக்க வேண்டும்" என கூறியிருந்தனர்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சீல் வைக்கவும், அந்தக் கட்டடங்களின் மின் இணைப்பை உடனடியாக துண்டித்து இடிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்பின்னர் அரசு தரப்பில் சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் 118 கட்டடங்கள் புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளன. 70க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் ஆறு தங்கும் அறைகளுடன் செயல்பட அனுமதி அளித்திருந்தது.இதன் பின் வழக்கின் தீர்ப்பு தேதி சொல்லாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிபதிகள் கிருபாகரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் அங்கீககாரம் அளிக்க நகராட்சி நிர்வாகத்துறை செயலரிடம் ஹோட்டல் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும், அதனை பரிசீலித்து தனித் தனியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும். அவற்றில் தவறுகள் ஏற்பட்டால், தொடர்புடைய அலுவலர்கள் மீது நகராட்சி நிர்வாகத்துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்

ABOUT THE AUTHOR

...view details