கொடைக்கானல் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”கொடைக்கானலின் மையப்பகுதியில் இயற்கை தந்த வரமாக ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது முற்றிலும் கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமானதாகும். ஏரி அமைந்துள்ள பகுதியில் 8 சென்ட் பரப்பளவு மட்டும் ஒரு தனியார் கிளப்பிற்கு ஒத்திக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தக் கிளப் 10 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு அப்பகுதியில் படகு குழாம், கடைகள், கழிப்பறை போன்றவற்றை கட்டி வணிக நோக்கில் செயல்பட்டுவருகிறது. மேலும் இந்த படகு குழாமிற்கு செப்டம்பர் 1ஆம் தேதியுடன் ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில், சட்ட விரோதமாக தற்போதும் படகு குழாம் இயக்கப்பட்டு வருகிறது.
இங்கு 150-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் படகுகளை இயக்குவதன் மூலம் வரும் வருவாய் கொடைக்கானல் நகராட்சிக்கும், மீன்வளத் துறைக்கும் 90 :10 என்ற விகிதத்தில் சென்று சேர வேண்டும். ஆனால் இந்த வருவாய் முழுவதும் தற்போது தனியாருக்கு சென்றுவிடுகிறது.