மதுரை:உலகப் புகழ் பெற்ற மதுரை கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்ரல் 20ஆம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (மே 5) கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது.
இதனையொட்டி கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக் கம்புடன் கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் அழகர்கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மதுரை மூன்று மாவடி, தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவையும், நேற்று (மே 4) இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனமும் நடைபெற்றது.
இதனையடுத்து இன்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், தல்லாகுளம் கருப்பண்ணசாமி சன்னதி எதிரில் வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன் சப்பரங்களில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து பச்சை பட்டு உடுத்தி, பக்தர்கள் புடை சூழ 'கோவிந்தா' முழக்கம் விண்ணை முட்ட வைகை கரை வந்தடைந்தார். அங்கு கள்ளழகரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்க, தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா காலை 5.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது.