பூக்களின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மதுரை மல்லிகையின் விலை குறைய தொடங்கியுள்ளது மதுரை: மாட்டுத்தாவணி அருகே நெல் வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி அருகில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலிருந்தும் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.
மதுரையின் தனிச்சிறப்பு மிக்க அடையாளமாகவும், புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்ற மதுரை மல்லிகை இங்கு அதிகம் விற்பனையாகிறது. அனைத்து வகையான பூக்களும் நாளொன்றுக்கு சுமார் 50 டன் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் தற்போது மல்லிகைப் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரூ.3000 -க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட மதுரை மல்லிகை தற்போது விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 5 டன் முதல் 10 டன் வரை மல்லிகை வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதே இதற்குக் காரணம் என மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகிறார்.
இன்றைய பூக்களின் விலை: பிச்சி ரூ.800, முல்லை ரூ.800, பட்டன் ரோஸ் ரூ.150, பட்ரோஸ் ரூ.150, செண்டுமல்லி ரூ.50, கனகாம்பரம் ரூ.1000, சம்பங்கி ரூ.150 எனப் பிற பூக்களின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது பூக்களின் விலை மிகக் குறைந்திருக்கின்ற காரணத்தால் பொதுமக்களும் வியாபாரிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி!