சென்னை மெரினாவில் கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு உரிமைக்காக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் இறுதியில் பொதுமக்களை கலைந்து செல்வதற்காக போலீஸார் தடியடி நடத்தியதால் கலவரமானது. இதுதொடர்பாக, அன்றைய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான அந்த ஆணையம், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் செய்து விசாரணை நடத்தி வந்தது. மதுரையில் நடந்த விசாரணை இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி ராஜேஸ்வரன் விருந்தினர் மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டத்தில் கடைசி நாள் நடைபெற்ற வன்முறை குறித்த விசாரணை மதுரையை பொருத்தவரை முழுவதுமாக முடிவடைந்துவிட்டது. மதுரையில் மட்டும் சுமார் 1002 மனுக்கள் பெறப்பட்டு, மொத்தம் 1,018 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.