தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐடிசி நிறுவனத்துக்கு எதிரான வழக்கு: அரசுக்கு மனு அளிக்க நீதிமன்றம் உத்தரவு! - மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை: ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து விராலிமலை ஐடிசி நிறுவனத்துக்கு தண்ணீர் வழங்குவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு புதிய மனு அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

By

Published : Nov 28, 2019, 11:35 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ஏ.கே.முகமது அப்பாஸ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் சரியான மழைப்பொழிவு இல்லாததால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எங்கள் கிராமத்துக்கு ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து மாதத்துக்கு இரு முறை தண்ணீர் வழங்கப்படுகிறது.

வடுகபட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஐடிசி கம்பெனி பெருவயல் சாலை வழியாக முத்தரசநல்லூர் காவிரி குடிநீர் திட்ட தொட்டியில் இருந்து பெற்று வருகிறது. எங்கள் கிராமத்துக்கு மாதத்துக்கு இரு முறை மட்டுமே காவிரி குடிநீர் வழங்கப்படும் நிலையில், ஐடிசி கம்பெனிக்கு தினமும் 1.50 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது.

இதனால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஐடிசி கம்பெனிக்கு எந்த அடிப்படையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது எனத் தெரியவில்லை. இதனால் ஐசிடி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு 18.7.2018-ல் மனு அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தில் விராலிமலை கிராமத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்தை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோரது அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கெவின்கரன் வாதிடுகையில், ஐடிசி நிறுவனத்துக்கு தண்ணீர் வழங்குவதால் எங்கள் கிராமத்துக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது வாரத்தில் இரு நாட்கள் தண்ணீர் வழங்கப்படுகிறது என்றார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தாக்கல் செய்த மனுவில், ஐடிசிக்கு தண்ணீர் வழங்குவதால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஐடிசி நிறுவனம் சார்பில் பணம் கட்டி தண்ணீர் பெறுகிறோம். இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரியத்துக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது. எங்கள் நிறுவனம் தண்ணீர் நிறுவனம் அல்ல, உணவுப் பொருட்களை பாக்கெட்டில் அடைக்கும் நிறுவனமாகும் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளரிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அவ்வாறு மனு அளித்தால் செயற் பொறியாளர் சட்டப்படி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மணல் குவாரி கண்காணிப்புக் குழுவை மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details