மதுரை: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த கொச்சுவேலியில் இருந்து மதுரை வழியாக உடுப்பி, முகாம்பிகை, சிருங்கேரி, கோவா ஆகிய நகரங்களை இணைக்கும் சுற்றுலா ரயில் சேவையை, டிசம்பர் மாதத்தில் இயக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி அந்த ஆன்மீக சுற்றுலா ரயில், டிசம்பர் 7ஆம் தேதி அன்று அதிகாலை 12.30 மணிக்குத் திருவனந்தபுரம் அடுத்த கொச்சுவேலி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை (புறப்பாடு காலை 07.30 மணி), திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், சென்னை, காட்பாடி, சேலம், ஈரோடு, போத்தனூர், பாலக்காடு வழியாக, டிசம்பர் 8ஆம் இரவு 07.30 மணிக்குக் கோவா அடுத்த மட்கான் ரயில் நிலையம் சென்று சேரும்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் உடுப்பி, மூகாம்பிகை கோயில், முருதேஷ்வர் கோயில், சிருங்கேரி சாரதா கோயில், ஹரநாடு அன்னபுரேஷ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் பயணிகள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அங்கிருந்து கோவாவில் உள்ள சுற்றுலாத் தலங்களையும் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் அறிவித்துள்ளது.