கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கரோனா ஊரடங்கால் தொழில்முடக்கம், நிறுவனங்கள் மூடல் போன்றவற்றால் வருமானமில்லாமல் மக்கள் தவித்துவருகின்றனர். இதனால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்கான தவணை செலுத்தும் காலத்தை மார்ச் முதல் மே வரை செலுத்த தேவையில்லை என கடந்த மார்ச் 27ஆம் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. தற்போது, ஆகஸ்ட் மாதம் வரை அந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சில நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி உத்தரவை அமல்படுத்த முடியாது என நேரடியாகவே சொல்கின்றன. பல நிறுவனங்கள் கடன் தவணை சலுகை கோரி அனுப்பும் விண்ணப்பங்களை பரிசீலிக்காமல் அப்படியே வைத்துள்ளன.
வேறு சில நிதி நிறுவனங்கள் கடன் தவணை சலுகை கேட்டு விண்ணப்பிக்க தனிக்கட்டணம் வசூலிக்கின்றன. கடன் தவணை செலுத்த தவறியதால் பல நிதி நிறுவனங்கள் கடன் பெற்று வாங்கிய இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றன. இதனால் பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.