கரூர் மாவட்டம் புகளூரைச் சேர்ந்த செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கரூர் மாவட்டம் புகளூர் தாலுக்கா பகுதியில் உள்ள வளையபாளையம், கொம்புப்பாளையம், கணபதி பாளையம், வேட்டமங்கலம் பஞ்சாயத்து ஆகிய பகுதிகளில் விவசாயமே அடிப்படை தொழிலாக உள்ளது. புகளூர் தாலுகா நிலத்தடி நீரை எடுக்க தடைசெய்யப்பட்ட பகுதியாக உள்ளது.
புகளூரில் நிலத்தடி நீரை எடுக்க இடைக்கால தடை!
மதுரை: கரூர் மாவட்டம் புகளூர் தாலுக்காவில் வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், நொய்யல் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், வளையபாளையத்தைச் சேர்ந்த சாமியப்பன், பொன்னுசாமி, கணபதிபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, வல்லியம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக புகளூர் தாலுக்கா பொதுமக்கள் குடிநீருக்காகச் சிரமப்படும் நிலையும், விவசாயம் பொய்த்துப் போகும் நிலையும் உருவாகியுள்ளது. இதுதொடர்பாக அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
ஆகவே, புகளூர் தாலுக்காவில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவும், அதற்காகப் பயன்படுத்தப்படும் லாரிகள், ஜெனரேட்டர்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புகளூர் தாசில்தார் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமைச் செயலர், பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலர், நகராட்சி நிர்வாகத் துறையின் செயலர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் எதிர் மனுதாரராக சேர்ப்பதாகவும், அவர்கள் வழக்கு குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து புகளூர் தாலுக்காவில் வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுக்க இடைக்கால தடைவிதித்து வழக்கை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.