தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நினைவோ ஒரு பறவை...மதுரையின் நினைவுகளை சுமக்கும் மகத்தான ஓவியர் மனோகர்!

மதுரையின் பாரம்பரியம் குறித்த மனோகர் தேவதாஸின் ஓவியங்கள் அனைத்தும் சாகாவரம் பெற்றவை. மிக நுணுக்கமாய் இவர் வரைந்த ஓவியங்கள் அனைத்துமே மதுரையின் நினைவுகளை இன்றும் சுமந்து நிற்கிறது.

artist manohar devadas
மனோகர் தேவதாஸ்

By

Published : Jul 24, 2021, 7:28 PM IST

Updated : Jul 25, 2021, 3:54 PM IST

மதுரை: அண்மையில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனோகர் தேவதாஸின் 'மதுரையின் பன்முகப் பரிமாணங்கள்' என்ற ஆங்கில நூலை பரிசளித்திருந்தார். அந்த சம்பவம்தான், மனோகர் மீது அனைவரின் கவனமும் குவிய காரணமாக இருந்தது.

இயல்பான நிகழ்வுகளைக்கூட நுணுக்கமாக கவனிக்கும் திறன் கலைஞர்களுக்கே வாய்க்கும் பேறு. அப்படியொரு பேறுபெற்றவர்தான் பத்ம ஸ்ரீ மனோகர் தேவதாஸ்.

ஓவியரும் எழுத்தாளருமான மனோகர்...

கருப்பு-வெள்ளை நிறங்களில் இவர் வரைந்த கோட்டோவியங்களை மதுரையின் வரலாற்று பதிவு என்றே சொல்லலாம். ஓவியம் மட்டுமல்லாது, எழுத்துக்களையும் தன் வசப்படுத்தியுள்ளார் மனோகர்.

மதுரை தெப்பக்குளம் மனோகர் கைவண்ணத்தில்

இவர் எழுதிய 'எனது மதுரையின் நினைவுகள்', 'ஓவியம் வரைவதில் உணரும் தோற்றம்', My Green Well Years, Multi Facets of My Madurai உள்ளிட்ட நூல்கள் மதுரையின் பெருமைகளைப் பறைசாற்றுபவை. இவரது கலைத்திறனைப் பாராட்டி இந்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு 'பத்ம ஸ்ரீ' விருது வழங்கி மரியாதை செய்தது. இவர் இதுவரை 7 நூல்களை எழுதியுள்ளார்.

நூறு வார்த்தைகளில் சொல்ல முடியாத விஷயங்களைக் கூட ஓர் ஓவியம் மிகச் சிறப்பாக விளக்கிவிடும். அதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓவியங்களைப் படைப்பது ஆகப்பெரும் கலைத்திறன். விழித்திறன் குறைந்த ஒருவரிடமிருந்து அவை வெளிப்படுகிறது என்றால், அதன் வீச்சு இன்னும் வீரியமாக இருக்கும் என்பதற்கு சான்று மனோகர் தேவதாஸின் ஓவியங்கள்.

இயற்கை எழில், ஓவியம்: மனோகர் தேவதாஸ்

மதுரை நினைவுகள்

தனது இளமைக்காலத்தின் பெரும் பகுதியை மதுரையில் கழித்த மனோகர், மதுரையின் பல்வேறு பரிமாணங்களை ஓவியத்தின் வழியே வெளிக்கொணர்ந்தார். மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவரது நண்பர்கள் பட்டாளத்தில், ஓவியர் ஜெயராஜ், கஃப்ரியேல் மற்றும் ஹமீது உள்பட எழுவர் இணைந்திருந்தனர்.

அப்போதெல்லாம் விடுமுறை நாள்களில் நண்பர்களோடு மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து, மதுரையின் சிறு சிறு தெருக்கள் வரை மனோகர் சிறகுகள் இல்லாத பறவையாய் திரிந்தார்.

ரயில் நிலையம், ஓவியம்: மனோகர் தேவதாஸ்

1950களில் இருந்த மதுரையின் பல்வேறு வகையான தோற்றப் பதிவுகள், இன்னமும் அவரது மனக்கண்ணில் புத்தொளி பாய்ச்சி கொண்டேயிருப்பதாகக் கூறும் மனோகர், இளமைக்காலத்தில் கண்டு, தன் நினைவில் ஆழ பதிந்தவைகளைக் கொண்டு பின்னாளில் வெளியிட்டதுதான் 'எனது மதுரை நினைவுகள்' புத்தகம் என்கிறார் புன்கையோடு.

வண்ணங்களில்லா வரலாற்று பதிவு

'ரெட்டினைட்டிஸ் பிக்மென்ட்டோஸா' எனும் பார்வைக்குறைபாட்டு நோயால் இவரது ஒரு கண் பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த நிலையிலும், ஓவியம் வரையும் ஆர்வத்தை ஒருபோதும் குறைத்துக்கொள்ளவில்லை மனோகர். வெளிச்சம் அதிகமாகவோ, குறைந்ததாகவோ இருந்தாலும் இக்குறைபாடு உள்ளவர்களுக்கு உலகைக் காண இயலாது.

தர்கா, ஓவியம்: மனோகர் தேவதாஸ்

இது போன்ற குறைபாடு மரபு வழியில் அவருக்கு ஏற்பட்டது. சிறுவயதிலேயே இக்குறைபாடு இருந்தாலும், பின்னர் வளர்ந்து பெரியவரானபோதுதான் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளார் மனோகர். இதற்கு எங்கும் மருத்துவம் இல்லை.

இந்தப் பாதிப்பிற்குப் பிறகு மனோகர் தேவதாஸின் பார்வை என்பது சுரங்கத்திலிருந்து வெளியே வெளிச்சத்தைப் பார்ப்பதைப் போன்றதாகத்தான் இருந்தது. இதனை குகைப்பார்வை என்பார்கள். இதனால் ஓவியங்கள் வரைவதில் சிரமம் ஏற்பட்டது. அத்துடன் நிறக்குருடும் சேர்ந்து கொண்டதால், ஒரு கட்டத்திற்குப் பிறகு வண்ண ஓவியங்களைத் தீட்டுவதற்கு இயலாமல் போய்விட்டது.

மதுரை திருமலை நாயக்கர் மஹால், ஓவியம்: மனோகர்

கலைஞனின் காதல் அதீதம்!

மனோகர் தனது அன்பிற்கினிய மனைவி மஹிமா குறித்து வார்த்தைக்கு வார்த்தை மிகவும் நெகிழ்ந்து பேசுகிறார். இருவரும் ஈருடல் என்றாலும் ஓருயிராய்த்தான் வாழ்ந்திருக்கிறார்கள். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னால் விபத்தொன்றில் பாதிக்கப்பட்ட மஹிமா, சக்கர நாற்காலியில்தான் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தார். இதுவே மனோகர் தன் வாழ்க்கையில் சந்தித்த முதல் அதிர்ச்சி என்றாலும், மஹிமாவின் ஊக்கமும், அனுசரணையும்தான் அவரை மீட்டெடுத்துள்ளது.

மனோகர் தனது அன்பிற்கினிய மனைவி மஹிமாவுடன்...

அச்சமயம் ஏறக்குறைய பார்வையை இழந்த மனோகருக்கு, கலைப் பயணத்தில் நல்வழிகாட்டியாக மஹிமா இருந்திருக்கிறார். மஹிமாவுக்கு எழுதிய கடிதங்களை எல்லாம் தொகுத்து ‘Dreams Seasons & Promises’ நூலாகவும் வெளியிட்டுள்ளார் மனோகர். கடந்த 2008ஆம் ஆண்டு மஹிமா இறந்துபோன பிறகு, ‘Mahema and the Butterfly’ என்ற நூலை அவரது நினைவாக வெளியிட்டுள்ளார்.

எளிய கலைஞரின் பெருங்கருணை

வெறும் ஐநூறு எண்ணிக்கையில்தான் படங்கள் வரைந்திருந்திருந்தாலும் அந்த ஓவியங்களால் கிடைக்கும் வருவாயை ஏழைக் குழந்தைகளுக்கும், கண் மருத்துவ அறக்கட்டளைகளுக்கும் நன்கொடையாக வழங்கியுள்ளார். தான் பணியாற்றிய ஸ்டாண்டர்டு பேட்டரிஸ் நிறுவனம், அதேபோன்று அரவிந்த் கண் மருத்துவமனை, சங்கர நேத்ராலயா ஆகியவை தன்னுடைய ஓவியப்பயணத்திற்கு உறுதுணையாய் நிற்பதை நன்றியோடு நினைவுகூர்கிறார்.

ஓவியம்: மனோகர் தேவதாஸ்

தன்னுடைய நூலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய குடியரசுத்தலைவருக்கு பரிசாக வழங்கியதை மிகப் பெருமையாகக் கருதும் மனோகருக்கு, மதுரையின் பாரம்பரியங்களில் தான் வரையாத இடங்கள் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

மதுரையின் நினைவுகளை சுமக்கும் மகத்தான ஓவியர் மனோகர்!

நினைவோ ஒரு பறவை...

மதுரை மீனாட்சிபுரத்திற்கு அருகிலிருந்த பச்சைக்கிணற்றில் ஓவியர் ஜெயராஜ் உள்பட நண்பர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்ததையும், நீச்சல் தெரியாமல் மூழ்க இருந்த நண்பன் அண்ணாமலையைக் காப்பாற்றியதையும் இன்னமும் நினைத்து பார்த்து மகிழ்கிறார்.

காலத்தின்போக்கில் மதுரையின் பாரம்பரியம் மருவிக் கொண்டிருந்தாலும், இந்த நிதர்சனத்தையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ பழக வேண்டும் என்று சொல்லும் பத்ம ஸ்ரீ மனோகர் தேவதாஸ், இப்போதும் தனது பால்ய கால மதுரையின் நினைவுகளைச் சுமந்து கொண்டே சென்னைப் பெருநகர வாழ்க்கையின் யதார்த்தத்தில் தன்னை இணைத்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: பைந்தமிழ் எழுத்துக்களில் திருவள்ளுவர்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!

Last Updated : Jul 25, 2021, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details