மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஜலால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"சமீப காலமாக வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் 222 பேர் வன விலங்குகளை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி பகுதியில் அரிய உயிரினமான இந்திய நரியை வேட்டையாடியதாக, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுவாக வன விலங்குகளை வேட்டையாடுவோர் மூன்று விதமாக உள்ளனர். 1.வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் தொடர்பான போதிய விழிப்புணர்வு அற்றவர்கள் 2. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் தொடர்பாக அறிந்திருந்தும் வேட்டையாடுபவர்கள் 3. பயிர்களை பாதுகாப்பதற்காக பொறிகள் மற்றும் கண்ணிகள் வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள்.
ஒவ்வொரு உயிரும் உணவுச்சங்கிலியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்திய நரி வகை அழிந்து வரும் வனவிலங்குப் பட்டியலில் உள்ள நிலையில், அவை வேட்டையாடப்படுவதும் அதிகரித்து வருகிறது. ஆகவே," திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் இந்திய நரி காணப்படும் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்.
பொறிகள் மற்றும் கண்ணிகள் விற்பனைக்கும் உற்பத்திக்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். திருச்சியில் இந்திய நரி வேட்டையாடப்பட்ட வழக்கு விசாரணையை வனக்குற்ற தடுப்பு பணியகத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
அடைத்து வைக்கப்படும் வகையில், வேட்டையாட பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை விற்பனை மற்றும் உற்பத்தி செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும். இந்திய நரி வகைகளை பாதுகாக்க மக்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வு, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.