தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எய்ம்ஸ் பணிகள் தொடங்காவிடில் டெல்லியில் போராட்டம் - சு. வெங்கடேசன் எம்பி - aiims medical college

மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பு எய்ம்ஸ் பணிகள் தொடங்கவில்லை எனில், டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன் எம்பி
சு.வெங்கடேசன் எம்பி

By

Published : Jun 16, 2021, 12:04 PM IST

மதுரை: மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இருவரும் மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை நேற்று (ஜூன் 15) ஆய்வுசெய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு. வெங்கடேசன், "இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தைப் பார்வையிட வந்தோம். ஆனால் கட்டட வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

மதுரை, விருதுநகர் மக்களவை உறுப்பினர்களாகிய நாங்கள் இருவரும் மத்திய அரசிடம் இதைக் கடுமையாக எடுத்துச் செல்லவுள்ளோம். வரும் 2023ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. இன்றுவரை பணிகள் நடைபெறவில்லை.

வரும் 2023-2024ஆம் ஆண்டு தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஜம்மு, மங்களகிரி உள்ளிட்ட இடங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மருத்துவர் மாணவர் சேர்க்கை கடந்தாண்டே தொடங்கி நடைபெற்றுவருகிறது.

மதுரை எய்ம்ஸைப் பொறுத்தவரை மருத்துவ மாணவர் சேர்க்கையும் தொடங்கவில்லை, கட்டட பணிகளும் தொடங்கவில்லை. இந்தக் கல்வி ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.

போராட்டம்

அடுத்த மாதம் இறுதியில் மழைக்கால மக்களவைக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாகவே மருத்துவ மாணவர் சேர்க்கை, கட்டட பணிகள் ஆகிய இரண்டும் தொடங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இதை அறிவிக்க மறுக்கும்பட்சத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் இந்தப் பிரச்சினை குறித்து பேசுவோம். டெல்லியிலேயே போராட்டத்தை நடத்துவோம்" என்றார்.

சு.வெங்கடேசன் எம்பி பேட்டி

தொடர்ந்து விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஒரு செங்கல்கூட வைக்கப்படவில்லை. இது குறித்து தென் மாவட்டங்களில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் இணைந்து டெல்லியில் நடைபெற உள்ள மழைக்கால கூட்டத்தொடரில் வலியுறுத்துவோம்.

கட்சி வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து மாவட்ட மக்களவை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து மதுரையில் எய்ம்ஸ் அமைவதற்காகப் பாடுபடுவோம்" என்றார்.

இதையும் படிங்க: நாட்டிலேயே முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் ஒருவர் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details