'தொடர் நீரோட்டத்திற்கு வழி செய்தால் நீர்மட்டம் கணிசமாக உயரும்' நீரியல் ஆய்வாளர் தகவல்!
கடந்த ஆண்டுகளை விட, இந்தாண்டு நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், மழைப் பொழிவினால் மட்டுமல்ல, தொடர் நீரோட்டத்திற்கு வழிவகை செய்தால்தான் நிலத்தடி நீரோட்டம் கணிசமாக உயரும் என, நீரியல் ஆய்வாளர் கனகவல்லி தெரிவித்துள்ளார்.
நீரியல் ஆய்வாளர் கனகவல்லி
By
Published : Jun 27, 2021, 8:26 PM IST
மதுரை:இயற்கையாகவே தமிழ்நாடு மழை மறைவு பகுதியாகும். பருவ காலத்தில் இங்கு பெய்யும் மழைநீரை, திட்டமிட்டு சேமித்தால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தமுடியும்.
இந்த சூட்சமத்தை அறிந்துதான், மதுரையை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆயிரக்கணக்கான குளங்களையும், ஏரிகளையும், கண்மாய்களையும் உருவாக்கி இருக்கக் கூடும்.
பாசன ஆற்றில் கலக்கும் கழிவுநீர்
மதுரை நகரில் இருக்கும் ஒவ்வொரு கோயிலையும் சார்ந்து பெரிய குளங்கள் இருப்பது அதற்கான சிறு உதாரணம்.
நிலத்தடி நீர்மட்டம்
வறட்சியான காலங்களிலும், ஆறுகள் வற்றாமல் இருக்க அடிப்படையாக உள்ள காரணங்களுள் நிலத்தடி நீரோட்டம் முக்கிய பங்காற்றுகிறது.
ஆண்டு
நிலத்தடி நீர்மட்டம்
(தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய அளவில்)
2003
பாதுகாப்பான வட்டாரங்கள்
ஓரளவு பாதுகாப்பான வட்டாரங்கள்
சுரண்டப்பட்ட வட்டாரங்கள்
அதிகளவில் சுரண்டப்பட்ட வட்டாரங்கள்
உப்புநீர் ஊடுருவிய வட்டாரங்கள்
வட்டாரங்களின் எண்ணிக்கை
97
105
138
37
8
மதுரையில் நிலத்தடி நீர்மட்டம்
மதுரையை பொறுத்தவரை, தற்போது நிலத்தடி நீர்மட்டம் 3.73 மீட்டர் உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டத்தின் ஆழம் ஒப்பீடு
2019 (மே)
2020 (மே)
2021 (மே)
1.08 (உயர்வு)
9.56 மீ
5.83 மீ (குறைவு)
படிப்படியாக உயர்ந்த நிலத்தடி நீர்
கடந்தாண்டு முதல் இந்தாண்டு வரை கணக்கிட்டு பார்க்கும்போது, படிப்படியாக மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
நிலத்தடி நீர்மட்டம்
(மீட்டரில்)
2020 - 2021
ஜனவரி
1.03
பிப்ரவரி
2.16
மார்ச்
2.30
ஏப்ரல்
2.13
இதைப் போலவே, 2019ஆம் ஆண்டு முதல் 2020 வரையிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம்
(மீட்டரில்)
2019 - 2020
ஜனவரி
0.98
பிப்ரவரி
0.35
மார்ச்
0.08
ஏப்ரல்
1.08
தமிழ்நாடு பொதுப் பணித்துறையில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் பிரிவு வெளியிட்டுள்ள மாதவாரியான புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, 2019 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தைவிட, இந்தாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை தான் மதுரையில் பரவலாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது தெரியவருகிறது.
குடிநீர்
கணிசமாக உயர்ந்த நிலத்தடி நீர்
இது தொடர்பாகநீரியல் ஆய்வாளர் கனகவல்லியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவர் கூறிய பதில்கள் பின்வருமாறு:
நீர்நிலைகளின் நிலை?
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் நீர் ஆதாரத்திற்கு பெரிதும் வாய்ப்பாக இருப்பது கண்மாய், ஏரி, குளம் ஆகிய நீர்நிலைகள்தான். கண்மாய், குளங்களுக்கு நீர் செல்ல வேண்டிய வரத்து கால்வாய்கள், அவை நிரம்பி வெளியேறுகின்ற போக்கு கால்வாய்கள் ஆகியவற்றின் நீரோட்டத்தின் காரணமாகவே நிலத்தடியில் நீர் சுரக்கின்றது.
புதர் மண்டி கிடக்கும் நீர்நிலை
இந்த நீர்நிலைகள் இருந்து வெளியேறுகின்ற நீர் சென்று சேரக்கூடிய ஆறுகள் மூலமாக நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்கின்றது. தற்போது இவை அனைத்துமே முழுமையாக நிரம்புவதற்கு வாய்ப்பில்லாமல் ஆகிவிட்டது. பல்வேறு இடங்களில் இந்த நீர் வழித்தடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளன.
சிதைக்கப்பட்ட நீர்நிலைகள்
பெரும்பாலான இடங்களில் நீர்நிலைகளின் முழு கொள்ளளவு பல்வேறு வகையிலும் சிதைக்கப்பட்டுள்ளன. கண்மாய், குளங்களுக்கு நீர் செல்ல வேண்டிய வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு மற்றும் புதர்மண்டி கிடப்பதால், எவ்வளவு மழை பெய்தாலும் பயனற்ற நிலையே தொடர்கிறது.
நீர்நிலை
கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பிறகு நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் மழைப்பொழிவு கணிசமாக இருந்துள்ளது. குறிப்பாக, மழை பொழிகின்ற நாட்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
வரத்து கால்வாய்கள் போன்ற நீர் வழித்தடங்களும், நீர் ஆதாரங்களும் முறையாகப் பராமரிக்கப்பட்டால், நிலத்தடி நீர் மட்டம் மேலும் வெகுவாக உயர வாய்ப்புள்ளது.
நீர் சேமிப்பு தேவை இக்கணம்!
மழைப்பொழிவின் போது கிடைக்கும் நீரை முறையாகப் பராமரித்தால், குடிநீர் பற்றாக்குறையை வெகுவாக குறைக்கலாம். மதுரையின் குடிநீர் தேவைக்கு வைகை அணையைப் பெரிதும் நம்பி இருக்கிறோம்.
ஆங்காங்கு உள்ள நீர்நிலைகளை சரியாகப் பயன்படுத்தினால், இதுபோன்று சார்ந்திருக்கத் தேவையில்லை. நிலத்தடி நீரின் தரத்தை உயர்த்தும் அதே நேரத்தில் அதன் அளவையும் அதிகரிப்பது அவசியம்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீராதாரங்களை மேம்படுத்தி, முறையாக நீரை சேமிக்க வேண்டும். தனிநபர்கள் தங்கள் வீடுகளில் பொழியும் மழைநீரை சேமித்து, தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
நீரியல் ஆய்வாளர் கனகவல்லி பேட்டி
தொடர் நீரோட்டம் முக்கியம்
தங்களுக்குப் போக எஞ்சிய நீரை ஓடைகளில் இணைக்கும் வகையில், கால்வாய் அமைப்புகள் கட்டமைக்கப்பட வேண்டும். அங்கிருந்து ஆறுகளில் அந்த நீர் சென்றடைவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும்.
இவ்வாறு நீரியல் ஆய்வாளர் கனகவல்லி தெரிவித்தார்.
கண்மாய்களில் நீர் தேங்குவதை காட்டிலும், ஆறுகள், ஓடைகள், கால்வாய்களில் நீரோட்டம் தொடர்ந்து இருக்குமானால் அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும்.
அந்த அடிப்படையில்தான் மதுரை மாவட்டத்தில் பரவலாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என நீரியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.