மதுரை:சிவகாசியைச் சேர்ந்த ஜோதிமணி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் வீட்டிலிருந்த தன் மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை.
இதுதொடர்பாக, சிவகாசி கிழக்கு காவல் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும்,ஆகையால், தன் மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
மனுவில் தவறானத் தகவல்:
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில், மனுதாரர் ஏற்கனவே அளித்த புகாரின் பேரில், மனுதாரரின் மனைவி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி, தன் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாததால் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகக்கூறியுள்ளார்.
இது தொடர்பாக இருவரும் எழுதி கொடுத்துள்ளனர். இதை மறைத்துத் தற்போது தன் மனைவியை ஆஜர்படுத்தக் கோரித் தவறான தகவல்களுடன் ஆட்கொணர்வு மனு செய்துள்ளார் .
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, உரிய நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் தேடுவதாகவும் காவல் துறையில் எழுதி கொடுத்ததை மறைத்து மனு அளிக்கப்பட்டதால், இந்த மனு தள்ளுபடிச் செய்யப்பட்டு, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றக் கிளை சட்டப் பணிகள் ஆணையத்திற்கு 4 வாரத்தில் அபராதத்தைச் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:தனிப்படைகள் 6 ஆக அதிகரிப்பு; ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் விடுவிப்பு