சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தியதைக் கண்டித்தும் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் 4ஆவது நாளாக இன்றும் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
இந்நிலையில், மதுரையை அடுத்துள்ள மகபூப்பாளையம் ஜின்னா திடலில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டம் இன்றிலிருந்து உண்ணாநிலை வடிவத்தை எடுத்துள்ளது.
இந்த உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “ஆளுகிற அதிகாரத்தைத் தான் மக்கள் உங்களுக்கு வழங்கியிருக்கிறார்களே தவிர இந்தியாவைப் பிளக்கிற அதிகாரத்தை, வெறுப்பின்பால் இந்தியாவை மோசமான நிலைக்குச் செலுத்துகிற அதிகாரத்தை வழங்கவில்லை
நாட்டில் உள்ள எத்தனையோ பிரச்னைகளைத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, திசை திருப்ப எண்ணற்ற புதிய பிரச்னைகளை உருவாக்குகின்றனர். இந்த சட்டமும் அதில் ஒன்றுதான். இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது, தமிழர்களுக்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்தச் சட்டத்திருத்தம் உள்நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு நேரடியான அச்சுறுத்தலையும் அவமானத்தையும் கொடுக்கிறது.
சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றக்கோரி உண்ணாநிலைப் போராட்டம் இந்தியாவை அடுத்த பல ஆண்டுகள் அலைக்கழிக்கப்போகிற மிகக் கொடிய ஒரு சட்டம் இது. ஒரு மதச்சார்பற்ற நாடு மத அடிப்படையில் குடியுரிமை வழங்கிட முடியாது. அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒரு சட்டத்திருத்தம் இது. இதனை நாம் முறியடித்தேயாக வேண்டும்” என்றார்.
இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நான்கு நாட்களாக நடைபெறும் இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக காவல்துறையின் தரப்பில் பல்வேறு சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பின்னரும் கூட போராட்டக்காரர்கள் அந்த சமரசத்தை ஏற்கவில்லை. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை நிறுத்தி காவல் துறையினர் தொடர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்பேட்டை, கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாய மக்களும் இந்த போராட்டங்களில் பெருந்திரளாக பங்கேற்று வருகின்றனர்.