மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐயின் சார்பாக சாத்தான்குளம் சம்பவம் குறித்து குற்றப் பத்திரிகை நேற்று (அக்டோபர் 26) தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது கசிந்துள்ள நிலையில், அது குறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "சாத்தான்குளம் சம்பவம் குறித்து சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கை முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை என நான் கருதுகிறேன். காரணம் அந்த அறிக்கையின் இறுதியில் சிபிஐ மேலும் சில சாட்சிகளை விசாரிக்கவும் அறிக்கைகளை பெறவும் கால அவகாசம் கோரியுள்ளது. அது நியாயமானது. கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி தங்களது பணியை தொடங்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணைக்காக வந்த அலுவலர்களில் சிலர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ஜெயராஜ், பென்னிக்ஸுக்கு எதிராக போடப்பட்ட வழக்கு பொய் வழக்காகும். சதியின் அடிப்படையில் அங்குள்ள காவலர்களால் இந்த வழக்கு புனையப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவருக்கும் அந்த காவல் நிலையத்தில் தொடர் சித்திரவதை நிகழ்ந்துள்ளது என்பதையெல்லாம் விளக்குகின்ற ஒரு அறிக்கையாக இந்த குற்றப்பத்திரிகை அமைந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கையை குற்றப்பத்திரிகையில் சாட்சியமாகக் காட்டி உள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரின் ஆடைகளில் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகள், காவலர்களின் லத்திகள், காவல் நிலையத்தின் சில பொருள்களிலிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் இவையெல்லாம் சிபிஐ ஒரு முடிவுக்கு வர மத்திய தடய அறிவியல் ஆய்வகம் உதவி புரிந்துள்ளது. மூலக்கூறு ஆய்வுகளும் சிபிஐயின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஜெயராஜ், பெனிக்ஸ் ரத்த மாதிரிகள் ஒத்துப்போவதாக சிபிஐ அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மெடிக்கல் சார்ந்த பல்துறை வல்லுநர்களை கொண்ட குழு ஒன்றை ஏற்படுத்தி, டாக்டர் வெண்ணிலா கொடுத்த அறிக்கை, கிளைச் சிறையில் வழங்கப்பட்ட அறிக்கை, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சான்றிதழ், உடற்கூறு ஆய்வு அறிக்கை ஆகிய அனைத்திலும் வேறுபட்ட தன்மைகள் இருந்ததனால் இந்த குழு அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளனர். மருத்துவர் வெண்ணிலா கொடுத்த அறிக்கையில் முரண்பாடுகள் இருக்கின்ற காரணத்தால் அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உண்டு.