மதுரை திருவேடகம் அருகே வைகை ஆற்றில் சிக்கி உயிரிழந்த, ராணுவ வீரர் வினோத்குமார் உடல் மீட்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரின் உடலுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்து, குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ”கடந்த 3 தினங்களுக்கு முன்பாக, வைகை ஆற்றில் 6 பேர் குளிக்கச்சென்றனர். இதில் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டு, இருவர் நீரில் மூழ்கி பலியாகினர். இதில் ஒருவர் உடல் மீட்கப்பட்டது, ராணுவ வீரர் வினோத்குமார் உடல் கிடைக்காமல் இருந்தது.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் வைகை ஆற்றில் வரும் நீரைக் குறைத்தால், எளிதாக மீட்கலாம் என்று கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் நீரின் அளவைக் குறைத்தார். இதில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் தேசியப்பேரிடர் மீட்புப்படைக்கு இணையாக உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் உடலை கண்டெடுத்தனர்.
ஏற்கெனவே பலமுறை அரசுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், இதுபோன்ற காலங்களில் ஆற்றின் கரையோரங்களில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
வேலைவாய்ப்பின்மையால் திசைமாறும் இளைஞர்கள்: முதலமைச்சர் போதை ஒழிப்பு குறித்து கலைவாணர் அரங்கத்தில் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். தமிழ்நாட்டிலேயே ஒரு கோடியே 75 லட்சம் இளைஞர்கள் உள்ளனர். இதில் 90 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகப்பதிவு செய்து, காத்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் மனம் அழுத்தத்தால், குடும்பச்சுமையால், கூடா நட்பால் போதைப்பொருட்களுக்கு அடிமையாக வருகின்றனர்.
ஏற்கெனவே சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர், திமுக ஆட்சி அமைந்த 5ஆவது மாதத்திலே, தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் இது குறித்து சட்டப்பேரவையிலும் கொலை, கொள்ளை, பாலியல் போன்றச்சம்பவங்கள் போதைப்பொருட்களால் நடைபெறுகிறது என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினார்.
எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? முதலமைச்சர் பேசிய வார்த்தை அழகாக உள்ளது. ஆனால், செயல்பாட்டில் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. போதைப்பொருள் குறித்து முதலமைச்சர், காவல் துறைக்கு உத்தரவிட்டாலே போதும். ஒரே நாளில் தடுத்து நிறுத்த முடியும்.