மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்," தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உடற்கூராய்வுகள் நடக்கின்றன. தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில்தான் உடற்கூராய்வுகள் செய்ய வேண்டும்.
மதுரை, செங்கல்பட்டு, சென்னை ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே தடயவியல் நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். விதிப்படி, உடற்கூராய்வுகள் நடத்தப்பட்ட தினமே அதன் அறிக்கையைச் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்களே உடற்கூராய்வுகள் செய்கின்றனர். ஆனால், மருத்துவர் முன்னிலையில் நடந்ததாக அறிக்கையைச் சமர்ப்பிக்கின்றனர்.
உடற்கூராய்வுகள் அறிக்கையை ஒரு மாதத்திற்குப் பிறகு, நீதிமன்றத்திற்கு அனுப்புவதால் காலவிரயமும், உடற்கூராய்வில் சந்தேகமும் ஏற்படுகிறது. உடற்கூராய்வுகள் அறைகளில் காணொலி பதிவு செய்ய வேண்டுமெனக் கடந்த 2008ஆம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்" இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு நேற்று (அக்.12) வந்தது. விசாரணையில், மருத்துவ விதிப்படி உடற்கூராய்வு முடித்து மாஜிஸ்திரேட் மற்றும் துறைத் தலைவருக்கு அறிக்கையளிக்க வேண்டும். தவறும் மருத்துவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கலாம். இதுகுறித்து சுகாதாரத்துறைச் செயலர் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டல்படி உடற்கூராய்வுகள் அறிக்கை இருத்தல் வேண்டும்.