தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை ஜிகர்தண்டா.. 600 ஆண்டு கால வரலாறும், வாழ்வியலும்! - ஜிகர்தண்டா வரலாறு

கடந்த 600 ஆண்டுகளாய் மதுரை மண்ணின் வரலாற்றோடும், வாழ்வோடும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது ஜிகர்தண்டா. நினைக்கும்போதே நாவில் நீர் சுரக்கும் அற்புதமான குளிர்பானம். மதுரைக்கு வருகின்ற வெளிநாட்டவரும்கூட சுவைக்க நினைக்கும் உற்சாக பானம். மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்ற ஜிகர்தண்டாவின் வரலாறும்கூட சுவை மிக்கதாகும். அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

ஜிகர்தண்டா,மதுரை
ஜிகர்தண்டா: மனம் குளிரும் மதுரையின் அடையாளம்

By

Published : May 11, 2022, 3:54 PM IST

மதுரை:மாநகரின் எந்தப் பக்கம் சென்றாலும் ஏதேனும் ஒரு ஜிகர்தண்டா கடையைப் பார்க்காமல் கடந்து செல்ல முடியாது. மதுரைக்கு மல்லிகை எப்படியோ, அப்படி ஒரு அடையாளம்தான் ஜிகர்தண்டாவும்.

ஒருமுறை இதனை சுவைத்து விட்டார்கள் என்றால், பிறகு வாழ்நாள் அடிமையாகிப் போவார்கள் என்பது நிச்சயமான உண்மை. அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தோர் கூட ஜிகர்தண்டாவுக்காவே மதுரைக்கு வந்து செல்வதும்கூட மிக சாதாரணமாக இங்கு நிகழ்கிறது.
உள்ளம் குளிரும் பானம்: மதுரையில் ஜிகர்தண்டா கடைகளை நடத்துபவர்கள் பெரும்பாலும் ஒரு குடும்பத்தின் பல்வேறு கிளைகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இஸ்லாமியர்களே இக்கடையை பல தலைமுறைகளாக தொன்றுதொட்டு நடத்தி வருகின்றனர்.

மதுரை விளக்குத்தூண் அருகேயுள்ள பேமஸ் ஜிகர்தண்டா கடையின் பொது மேலாளர் முகமது மீரான் கூறுகையில், 'எனது தாத்தா ஷேக் மீரான் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிலுள்ள ஆறாம்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர்.

அவரது காலத்தில்தான் ஜிகர்தண்டா கொண்டுவரப்பட்டது. இந்தப் பானம் வடக்கிலிருந்து இங்கே கொண்டுவரப்பட்டதாகும். ஜிகர் என்றால் உள்ளம். தண்டா என்றால் குளிர். இந்தப் பெயரை மட்டும் எடுத்துக்கொண்டு, அதன் மூலப்பொருள்கள் இங்குள்ள மக்களின் உடல் நலனுக்கு ஏற்றாற் போன்று மாற்றி அறிமுகப்படுத்தப்பட்டது' என்கிறார்.
எளிமையான மூலப்பொருள்கள்:மதுரையில் தயாரிக்கப்படும் ஜிகர்தண்டாவுக்கான மூலப்பொருள்களே மிக சுவைமிக்கவை. பாலாடை, பாதாம் பிசின், கடற்பாசி, நன்னாரி சர்பத், ஐஸ்கிரீம் என்ற கலவைகளே ஜிகர்தண்டாவாக மாற்றம் பெறுகின்றன.

கோடைக் காலத்திலும், நகர்ப்புற 'ஷாப்பிங்' சமயங்களிலும் மதுரை மக்கள் புத்துணர்ச்சிக்கான தங்களின் தேர்வாக முதன்மைப் பட்டியலில் வைத்திருப்பது ஜிகர்தண்டாதான். அதேபோன்று வெளிமாவட்ட, வெளிமாநில, வெளிநாட்டுப் பயணிகளுக்கும் மதுரையின் முக்கிய அம்சமாகவும் ஜிகர்தண்டாவே திகழ்கிறது.
வேறெங்கும் இல்லாத சுவை: தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த ஐயாதுரை கூறுகையில், 'மதுரைக்கு வந்து ஜவுளி கொள்முதல் செய்வதற்காக அடிக்கடி வருவேன். அவ்வாறு வரும்போதெல்லாம் விளக்குத்தூண் வந்து ஜிகர்தண்டா அருந்துவிட்டுச் செல்வது வழக்கம்.

காரணம் இதன் சுவை' என்கிறார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா கூறுகையில், 'மதுரையில் ஜிகர்தண்டா மிகவும் புகழ்வாய்ந்தது என்பதால், என் குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக வந்த இடத்தில், இதனைப் பருக வந்தோம். இதற்கு முன்பாக சென்னையில் ஒருமுறை சாப்பிட்டுள்ளேன்.

ஆனால், மதுரையில்தான் சுவை அதிகம். 'காதல்' திரைப்படத்தில் கதாநாயகிக்கு அவரின் தந்தையார் ஜிகர்தண்டா வாங்கிக் கொடுப்பார். அதைப் பார்த்தபோது, ஜிகர்தண்டா சாப்பிட வேண்டும் என்ற ஆசை உருவானது. மதுரையில் வந்து பருகுவதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. இன்றுதான் கிடைத்தது' என்கிறார்.

ஜிகர்தண்டா வணிகம்: தற்போது மதுரையில் மட்டும் 300க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கலாம் என்கின்றனர் வணிகர் சங்க நிர்வாகிகள். தினமும் இந்தக் கடைகள் மூலமாக நடைபெறுகின்ற வியாபாரம் மதுரை நகர பொருளாதாரத்திற்கும் உத்வேகம் அளிக்கக்கூடியது.

மதுரையிலுள்ள உள்ள சில கடைகளில் இருந்து ஜிகர்தண்டா சிங்கப்பூர் உள்ளிட்ட சில கிழக்காசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜில்... ஜில்... ஜிகர்தண்டா: மனம் குளிரும் மதுரையின் அடையாளம் குறித்த சிறப்பு தொகுப்பு
ராஜ பானம்:சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியரும், பாண்டிய நாட்டு ஆய்வு நடுவத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் கூறுகையில், மதுரை கலாச்சாரத்திற்கும், திருவிழாக்களுக்கும் பெயர் பெற்ற நகராகும். மதுரை மல்லிகையுடன் ஜிகர்தண்டாவும் தவிர்க்க இயலாத அடையாளமாகத் திகழ்கிறது.
இந்தப் பானத்தை மொகலாயர்கள் அறிமுகப்படுத்தினர். பாண்டியர்களின் ஆட்சிக்குப் பிறகு மாலிக்காபூர் படையெடுப்பு நிகழ்ந்த கி.பி.1311ஆம் ஆண்டுக்குப் பிறகு மதுரையை குறிப்பிட்ட காலம் வரை சுல்தான்கள் ஆட்சி செய்தனர்.
ஜலாலுதீன் ஆசன் கான்தான் மதுரையை ஆண்ட முதல் சுல்தான். இவரது காலத்தில்தான் ராஜ பானமாக ஜிகர்தண்டா அறிமுகமானது. அரச குடும்பத்தவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பானமாகும்.
மதுரையின் சிறப்பு மூலப்பொருள்கள்:வடஇந்தியாவில் தயாரிக்கப்படும் ஜிகர்தண்டாவுக்கும், மதுரையில் தயாரிக்கப்படும் ஜிகர்தண்டாவுக்கும் பெருமளவு வேறுபாடுகள் உண்டு. கடல்பாசி பயன்படுத்தப்படுகின்ற காரணத்தாலேயே மதுரை ஜிகர்தண்டாவுக்கு தனிசிறப்பு உருவானது.
அதுமட்டுமன்றி நன்னாரி சர்பத்துக்குப் பயன்படுத்தக்கூடிய செடிகள் மதுரையைச் சுற்றி பல்வேறு மலையடிவாரங்களில் காண முடியும். இவையெல்லாம் மருத்துவம் குணம் மிக்கவை. எவ்வளவு வெப்பநிலை இருந்தாலும், அதனை சமன்படுத்தக்கூடிய இந்தக் கலவைகள்தான் மதுரை ஜிகர்தண்டாவின் வெற்றிக்குக் காரணம்' என்கிறார்.
மறக்கமுடியுமா?மதுரை வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மதுரையின் வரலாற்றுப் பாரம்பரியம் மற்றும் தொன்மை குறித்து நினைவிருக்கிறதோ இல்லையோ, ஆனால் அவர்கள் பருகிச் சென்ற ஜிகர்தண்டாவின் சுவை நாவுக்குள் நிறைந்திருக்கும்.
நினைக்கும்போதே உள்ளம் குளிரச் செய்யும் ஜிகர்தண்டாவை சுவைக்காமல் இனி மதுரையின் நினைவுகளை யாரும் கொண்டு செல்ல முடியாது என்பதே உண்மை.

ABOUT THE AUTHOR

...view details