மதுரையிலிருந்து விருதுநகர் மார்க்கமாக செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில் நேற்று மாலை அரை மணி நேரம் தாமதமாக திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.
இதற்கு நேர் எதிரே செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மதுரை செல்லும் பயணிகள் ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
மேற்கண்ட இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே பயணம் செய்வதை அறிந்த அலுவலர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து இரு ரயில்களின் ஓட்டுநர்களை தொடர்பு கொண்டு உடனடியாக ரயில்களை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். தொடர்ந்து இரண்டு ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
பின் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளிக்குடியில் பணியில் இருந்த நிலைய அலுவலர் தீப்சிங் மீனா இந்தியில் தகவலை கூறியதாகவும், அவரது தகவலை திருமங்கலம் நிலைய அலுவலர் ஜெயக்குமார் தவறாக புரிந்து கொண்டதால் இச்சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இச்சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி கள்ளிக்குடி நிலைய அலுவலர் தீப்சிங் மீனா, திருமங்கலம் நிலைய அலுவலர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் தென் மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், மேற்கண்ட இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.