மதுரை: மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினர் ஒன்றிணைந்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் நாளை(ஜன.10) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் அமைதி பேச்சுவார்த்தையை முழுமையாக வீடியோபதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த முனியசாமி உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், "மதுரை அவனியாபுரத்தில் பல சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாகக் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாக்கல் செய்த வழக்கில் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து கமிட்டி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தைச் சேர்த்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. ஆனால் அவனியாபுரத்தில் மாவட்ட நிர்வாகம் மட்டுமே ஜல்லிக்கட்டு விழா நடத்துகிறது. எனவே ஜனவரி 15ல் நடக்கவிருக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்த வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.