திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "நீர் நிலைகள், சாலை, பொதுப்பாதை, உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் ஆகியவைகள் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது.
எனவே, அரசு நிலங்களை ஆக்கிரமிப்போர், அதற்கு துணை போகும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நீர் நிலை ஆக்கிரமிப்பு, சாலை மற்றும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடங்கள் ஆக்கிரமிப்பு வழக்குகளை தனித்தனியாக பிரித்து பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், ஆக்கிரமிப்புக்கு உதவி செய்யும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க என்ன வாய்ப்புள்ளது? என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். மேலும், ஆக்கிரமிப்பு வழக்குகளில் வழக்கறிஞர் முகமது ஆதீப்பை அமிகஸ்கியூரியாக (நீதிமன்றத்துக்கு உதவுபவராக) நியமித்து உத்தரவிட்டு வழக்கு, விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மின்சார கணக்கீடு முறைக்கு எதிரான மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!