மதுரை:மதுரை, ஜல்லிக்கட்டில்ஒருவரது காளை ஒரு போட்டியில் மட்டுமே பங்கு பெற அனுமதிக்கக் கோரிய மனுவை விசாரித்த நீதிமன்றம், இதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் மனு தாரர் கோரிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த மானகிரி செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழ்ப் புத்தாண்டு அன்று தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டாகத் தொடங்கும் அதனைத் தொடர்ந்து பாலமேடு , புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் சாதியின் ஆதிக்கம் நிறைந்து உள்ளதால் உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உயர்நீதிமன்றம் சாதியின் பெயர் சொல்லி எந்த காளைகளையும் அவிழ்த்து விடக்கூடாது என்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது.
இந்நிலையில், 3 நாள் தொடர்ந்து நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக மாடு பிடி வீரர்கள் ஆயிரக்கணக்கான நபர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் தங்களது 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட காளைகளை அவிழ்த்து விடுவதற்காக தற்போது ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு சிலர் VIP என்றும் ஜல்லிக்கட்டு அமைப்பு தலைவர்கள் என்று கூறி தங்களது காளைகளை மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் அவிழ்த்து விடுகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய விவசாயிகள் காளை வளர்ப்பவர்களுக்குக் காளை அவிழ்த்து விட வாய்ப்பு கிடைப்பதில்லை, பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே இது போன்ற விஐபி ஜல்லிக்கட்டு பேரவை என்பவர்களுக்கு 3 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்காமல் ஒருவரது காளை ஒரு போட்டியில் மட்டுமே பங்கு பெற அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் மனு தாரர் கோரிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்ய உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.
இதையும் படிங்க:பி.சண்முகத்திற்கு 'அம்பேத்கர் விருது', சுப.வீரபாண்டியனுக்கு 'பெரியார் விருது' - தமிழக அரசு அறிவிப்பு