தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரிய வழக்கு... டிச.19-க்கு ஒத்திவைப்பு! - madurai

ED Ankit Tiwari Bail Case: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் வழங்க கோரிய வழக்கில், அரசுத் தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட வேண்டும் என கால அவகாசம் கூறியதால் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 1:57 PM IST

மதுரை:திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க, தனக்கு 3 கோடி ரூபாய் லஞ்சம் வேண்டும் என மதுரை அமலாக்கத்துறையில் பணிபுரியும் துணை இயக்குநர் அங்கித் திவாரி, மருத்துவர் சுரேஷ் பாபுவை அணுகி உள்ளார். மருத்துவர் சுரேஷ் பாபு 3 கோடி ரூபாய்க்கு ஒத்துக் கொள்ளாத நிலையில், 51 லட்சம் ரூபாய் கண்டிப்பான முறையில் தர வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.

இதனை அடுத்து மருத்துவர் சுரேஷ் பாபு கடந்த நவம்பரில் 20 லட்சம் ரூபாயை அங்கித் திவாரியிடம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வாட்ஸ் ஆப் மூலமாக அங்கித் திவாரி மீதியுள்ள 31 லட்சம் ரூபாயை கேட்டு தொந்தரவு செய்ததையடுத்து, மருத்துவர் சுரேஷ் பாபு, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி சுரேஷ் பாபு, ரசாயனக் கலவைகள் தடவிய 500 ரூபாய் நோட்டு கட்டுகளை பேக்கில் வைத்து அங்கி திவாரியிடம் கொடுத்துள்ளார். அப்பொழுது தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத் துறையினர் காரில் விரட்டி பிடித்து கைது செய்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், அங்கித் திவாரியை மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதி பெற்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில், அங்கித் திவாரி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில், கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்திருந்தார். அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

இதன் காரணமாக அமலாக்கத்துறை அதிகாரி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டு. புகார் கொடுத்த மருத்துவருக்கு எதிராக அமலாக்கத்துறையில் எந்த வழக்கும் இல்லை. அவ்வாறு இருக்கும்போது இந்த வழக்கிற்கு முகாந்திரம் இல்லை. மருத்துவருக்கு எதிரான எந்த வழக்கும் இல்லாத நிலையில், அதனை முடிப்பதற்கு எவ்வாறு லஞ்சம் கேட்க முடியும்?

எனது வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய தீவிர சோதனையில், மொபைல் மற்றும் மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிற எந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை. எனவே உச்ச நீதிமன்ற பல்வேறு உத்தரவுகள்படி இந்த கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 15 நாட்களாக சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும்.

ஜாமீன் வழங்கும் பட்சத்தில், நீதிமன்றம் விதிக்கும் அத்தனை நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றுவோம்” என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு இன்று (டிச.14) நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக வேண்டி உள்ளது என்றும், மேலும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்புத்துறை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகிறது.

எனவே இந்த வழக்கு விசாரணைக்கு கால அவகாசம் கோரினர். அங்கித் திவாரி தரப்பு வழக்கறிஞர்களும், அதனை ஏற்றுக் கொண்டனர். இதனை அடுத்து வழக்கின் விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க:'சுதந்திரம் பெற்று 75 ஆண்டுளாகியும் சாதி, மதம் கடந்து பொது மயானம் இல்லாதது துரதிர்ஷ்டமானது' - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

ABOUT THE AUTHOR

...view details